Wednesday, June 18, 2008

ஆனைமுத்து நூல் நிதி ஏன்?

தோழர்களே!
ஆனைமுத்து ஜூன் 21இல் 81-அய்த் தாண்டுகிறார். 60 ஆண்டுகள் - தமிழ் - தமிழன் - தமிழ்நாடு சிக்கல்களுக்கு தீர்வு காண உழைத்திருக்கிறார். களப்பணி - பிரச்சாரம் - எழுதிக் குவித்தது - எல்லாம் காற்றில் கலந்த பேரோசையாக! இவர் எழுத்தில் நூலானது - 1980இல் - ஒரு சிறு பகுதி மட்டுமே!பெரியாருக்கும் ஆலோசகர்: பலருக்குத் தெரியாது - தோழர் ஆனைமுத்து பெரியாருக்கும் ஆலோசகர் என்பது. இலக்கிய - சட்ட - வரலாற்றுச் செய்திகளில் நாள் தேதி இடம் - உட்பட நினைவில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் இவர். புத்தமதத்துக்குப் போனாலும் - நாத்திகன் ஆனாலும் - இந்து இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் நீங்கள் இந்துதான் - என்ற செய்தியை ஆதாரங்களுடன் - நீதிமன்ற தீர்ப்பு சான்றுகளுடன் பெரியார் முன் வைத்தார் ஆனைமுத்து. "தப்பு பண்ணிட்டேன்” என்று பெரியார் தலையில் அடித்துக் கொண்டார். அதுமுதல் ஆனைமுத்தை முதன்மை பிரச்சாரகர் ஆக்கினார், பெரியார்.இலக்கியச் சுரங்கம்: தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் - ஆனைமுத்து. எந்த இலக்கியத்தில் - எந்தச்சொல் - எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தவர். திருக்குறளில் பெரிய ஆராய்ச்சியே செய்து - அது ஒரு நீதி நூல் மட்டுமே - மனுநீதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கும் ஈவிரக்கமற்ற அரசக் கொடுங்கோன்மைக் கருத்துக்கள் - திருக்குறளில் இல்லை என்றவர் ஆனைமுத்து. மனு - கவுடில்யர்படி ஆண்டவர் வென்றார்கள். திருக்குறள்படி வாழ்ந்தவர்கள் - வீழ்ந்தார்கள். ஆட்சிக்கு வன்முறை அவசியம். இராணுவம் அவசியம். புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான் - என்பன போன்ற ஆனைமுத்து கருத்துகள் "அட்சரம் லட்சம்” பெறும்!குடும்ப நிலைமை / பொருளியல்: மக்களுக்காகப் பாடுபடும் - தோழர் ஆனைமுத்துவின் பொருளியல் நிலை என்ன? குடும்ப நிலை என்ன? எங்கேயும் யாரிடமும் இவர் பேசாத செய்திகள் இவை. இருந்த 8 ஏக்கர் நிலத்தை - வந்த அந்நாள் (1950) ரூ.8000-10,000 பணத்தை - இயக்கம் வளர்த்ததிலும் பத்திரிகை நடத்தியதிலும் "பாழ் பண்ணியவர்” ஆனைமுத்து. ஒருபிடி நிலக்கடலையும் - இரண்டு பேரீச்சம்பழமும் இரவு உணவாகச் சாப்பிட்டு புத்தகம் - கட்சி அறிக்கை கட்டுகள் - இந்தக் கையில் 20 கிலோ - அந்தக் கையில் 20 கிலோவுடன் டெல்லி - மும்பை ரயில் மேம்பாலங்களில் இவர் ஏறும் காட்சி - துயரத்திலும் துயரம். அது அல்ல நம் கவலை! ஆனைமுத்துவின் சிந்தனை - எழுத்து - தன் வரலாறு - நூலாகாதது! பல ஆண்டுகளாக இவர் எழுதும் சிந்தனையாளன் Periyar Era - தலையங்கம் அனைத்தும் நூலாகத் தகுந்த - தமிழ்மக்கள் மேம்பாட்டு மாமருந்து. நூலாகவில்லை. அது நமக்கு இழப்பில்லையா? அதுவே நம் கவலை!பெரியார் தமிழ்ப் பேரவை: எத்தனையோ பேரறிஞர்களின் சிந்தனைகள் - எழுத்துக்கள் - காற்றில் கலந்து மண்ணோடு மண்ணாகின - தமிழனின் பொறுப்பற்ற புறக்கணிப்பால்! ஆக்ஸ்போர்ட் படிப்பாளி - கம்யூனிசத் தந்தை - KTK தங்கமணியின் சிந்தனைகள் - தன் வரலாறு நூலானதா? தமிழை - புது பீடத்தில் ஏற்றிய பாவாணருக்குத் தன்வரலாறு இருக்கிறதா? சுர்ஜித் - நல்லகண்ணு - வரதராசன் என்று கம்யூனிசக் கனவில் தம் வாழ்வை அழித்த பேரறிஞர் - யாருக்கும் அவர் தம் சிந்தனைகள் நூலாக நாம் வழி செய்யவில்லையே! அதனால் பெரியார் தமிழ்ப் பேரவை களமிறங்கியிருக்கிறது - மக்களிடம் பணம் திரட்டி அறிஞர்களின் சிந்தனைகளை நூலாக்க! இதில் முதல் முயற்சி - உடன் இருப்பு - அருகாமை கருதி தோழர் ஆனைமுத்துவுக்கு. இந்த எம்பணி - எம் தொடர் திட்டத்தில் முதல்படி தான்!கொடுங்கள் - கொடுங்கள் தோழர்களே! அள்ளிக் கொடுங்கள் - கொட்டிக் கொடுங்கள், ஒரு லட்சம் என்பது - இரண்டு லட்சமானால் - அது தமிழனின் பொறுப்புணர்வின் வெற்றி! அனைத்து நன்கொடைக்கும் முறையான ரசீது உண்டு.
ஒரு பேரறிஞனை - அவர் வாழும் காலத்தில் பாராட்ட பணம் தாருங்கள்!நன்கொடையை வே. ஆனைமுத்து, பா. இராமமூர்த்தி என்னும் இணை பெயரில் காசோலை வரைவோலைகளாக அனுப்ப வேண்டிய முகவரி:சங்கமித்ரா, பெரியார் தமிழ்ப்பேரவை, ப.எண்.1/429, தென்பெரும் நெடுஞ்சாலை, வண்டலூர் வாயில், சென்னை - 600 048. பேசி : 9841359717
---சங்கமித்ரா

No comments: